புதிய ஆன்லைன் சேவை: சொத்தின் 'பட்டா வரலாறு' அறிய தமிழக அரசு புதிய திட்டம்!
TN Govt patta sitta issue
சொத்துக்குப் பட்டா பெறுவது எளிமையானதைத் தொடர்ந்து, தற்போது தமிழக அரசு வருவாய்த் துறையின் மூலம் சொத்துரிமை விவரங்களை மக்கள் முழுமையாக அறிய உதவும் புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, 'பட்டா வரலாறு' (Patta History) என்ற புதிய சேவை விரைவில் பொதுமக்களுக்காகக் கொண்டுவரப்படவுள்ளது.
வில்லங்கச் சான்றுக்கு இணையான பட்டா வரலாறு
தற்போது, ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அது அடமானத்தில் உள்ளதா, முன்பு யார் பெயரில் இருந்தது போன்ற விவரங்களை பத்திரப் பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC) மூலம் அறிந்துகொள்ளலாம்.
இதேபோல், வருவாய்த் துறையின் பட்டாவிலும் சொத்துரிமை விவரங்கள் இருந்தாலும், பரிமாற்றங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிய முடியாது. இந்தப் போதாமையை நீக்கும் வகையில், புதிய 'பட்டா வரலாறு' சேவை வருகிறது.
பட்டா வரலாற்றின் பலன்கள்:
நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள் மற்றும் மாற்றங்கள்.
பட்டா எப்போது மாற்றப்பட்டது மற்றும் எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடந்தது.
பட்டா எந்தக் காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.
சோதனை அடிப்படையில் தொடக்கம்
இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் இது நடைமுறைப்படுத்தப்படும். சோதனை வெற்றி பெற்றால், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். தற்போது, இந்த 'பட்டா வரலாறு' விவரங்களை 2014-ஆம் ஆண்டு முதல் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் என்றும், இதற்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt patta sitta issue