தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் வணக்கம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2055 ஆண்டுச் சிந்தனை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கி இனிவரும் நூற்றாண்டுகளின் சிந்தனைக் களத்திற்குத் தடம் அமைத்துத் தந்துள்ளது திருக்குறள். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நம் தமிழ்நாடு அதனால்தான் திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது. வள்ளுவத்தின் மாண்பு சொல்லிலடங்காது. இதன் சிறப்பு கருதியே இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருக்குறளைத் தம்வயமாக்கிக் கொண்டுள்ளன.

வள்ளுவத்தில் கட்டுக்கடங்காத கற்பனை இல்லை; பொய்யும் புரட்டுமில்லை; மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையே வள்ளுவர் வகுத்துரைக்கிறார். வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல். உலகத்தின் எந்த மூலையில் உள்ள எவரும் பின்பற்ற தக்க கருத்துக் களஞ்சியம். ஆயிரக்கணக்கான வழிநூல்கள் தோன்ற இடம் தந்து, அள்ள அள்ளக் குறையாத பெட்டகமாய்த் திகழ்வது திருக்குறளின் தனிச்சிறப்பு.

விடுதலைக்கு முன்னரே தந்தை பெரியார் குறட்பாவைத் தமிழர்தம் அடையாளச் சின்னமாக எடுத்துக் காட்டினார். விடுதலைக்குப்பின்னர் பேரறிஞர் அண்ணா திருக்குறளைத் திருப்பணியாகவே கொண்டு எழுச்சியுறச் செய்தார். குறளோவியம் கண்ட முத்தமிழறிஞர் கலைஞர் சொல்லிலும் கல்லிலும் திருவள்ளுவரை வடித்துக் காட்டித் திருவள்ளுவருக்கு என்றும் அழியாத சின்னத்தை உருவாக்கியதோடு தமிழகத்தின் தலைநகரில் கோட்டம் அமைத்துத் தமிழ் மக்களின் அன்புப் பெருக்கினை வெளிப்படுத்தினார்.

ஏனைய தமிழ் நூல்களிற் காணப்படாத சிறப்பியல்புகள் திருக்குறளுக்கு உண்டு. நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைத் தெளிவாகக் கூறிய நூல்களுள் குறளுக்கு ஈடானது வேறு இல்லை. அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டு செறிவின் அடையாளமாகவும் கருத்துக் கருவூலமாகவும் திகழும் திருவள்ளுவரின் பெருமையினை உலகுக்குப் பாறைசாற்றும் வகையில் தைத்திங்கள் இரண்டாம் நாளில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்படுகிறது.

இவ்வகையில் இவ்வாண்டு திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தைத் திங்கள் இரண்டாம் நாளன்று (16.01.2024) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி ! என்று அந்த செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn govt flower salution to thiruvalluvar statue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->