உடனடியாக பணிக்கு வாங்க - தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு.!!
tn government say sanitation workers return work
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளாக நடைபெற்று வருகிறது. தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.
பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதேபோல், சென்னை மாநகராட்சி சார்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
tn government say sanitation workers return work