#தூத்துக்குடி || பெட்ரோல், வெடிகுண்டு வீச்சு வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் - தமிழக அரசுக்கு சிபிஐஎம் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பெட்ரோல், வெடிகுண்டு வீச்சு வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலசயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் வருவாய் கிராமத்திலுள்ள 915 ஏக்கர் விவசாய நிலத்தினை புதுக்கோட்டை செல்வம் என்பவர் தலைமையிலான நிலமோசடி கும்பல் மோசடியான ஆவணங்கள் மூலம் அபகரித்திடும் நோக்கத்தோடு மேற்படிகிராம மக்களை அச்சுறுத்தி மிரட்டி வந்தனர். 

எனவே கிராம மக்கள் 2008-ம் வருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளரை அணுகி உதவிட கேட்டதின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த கிராம மக்களுடன் நின்றது.  இதை பொறுத்துக் கொள்ள முடியாத புதுக்கோட்டை செல்வம் என்பவர் அடியாட்கள் துணையோடு பல சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டார். 

எனவே அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வழக்கறிஞர் என்பதால் அந்த வழக்கை வாபஸ் பெறவேண்டி தூத்துக்குடியில் ஒரு சில வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் உண்மை நிலையினை தெரிவித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தூத்துக்குடி மாவட்ட செயலாளர் க.கனகராஜ் சில தோழர்களுடன் 06.01.2012 அன்று தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்திற்கு சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். 

இத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற போது அங்கேயும் கட்சி தோழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் க. கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது மனைவிக்கு தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. மன அழுத்தத்திற்கும் ஆளாகி சிகிச்சை பெற வேண்டி வந்தது.

இதுதொடர்பான வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிபிசிஐடி புலன் விசாரணைக்கு 2012லேயே மாற்றப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் அவ்வழக்கினை முடித்துவிடுவது என்கிற முடிவுக்கு காவல்துறை வந்தது. பாதிக்கப்பட்டவர் சார்பிலும், கட்சியின் சார்பிலும் உறுதியாக மறுத்த சூழலில் 01.04.2022 அன்று வெடி குண்டு வீச்சில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சில வழக்கறிஞர்கள் சம்பந்தபட்டு இருப்பதும் அதில் ஒருவர் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மாநில பார் கவுன்சில் உறுப்பினராக உள்ள டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்றும் தெரிய வருகின்றது. மேற்படி டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவானது 25.04.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

எனவே சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தமிழ்நாடு (ம) புதுச்சேரி மாநில பார் கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் மீது பார் கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi petrol bomb case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->