ஆகம விதிகளுக்கு மாறாக நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்!
Thiruparankundram case HC Madurai Bench TN Govt
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கோவில் நிர்வாகத்தின் வாதம்:
கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகம விதிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி வாதாடினார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள்:
பழைய நடைமுறை: பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
ஆகம விதிகள்: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடைமுறை ஆகம விதிகளின்படியே தொடர்கிறது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களைச் செயல்படுத்த முடியாது.
தனிநபர் தலையீடு: கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்றக் கோர தனிநபருக்கு உரிமை இல்லை. அர்ச்சனை, பூஜை போன்று தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகளே பொருந்தும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் 2021-ல் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.
தொல்லியல் ஆதாரம்:
மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் 1981-ல் நாகசுவாமி எழுதிய புத்தகமும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மலை அடிவாரத்தில் இருந்து பாதி வழியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என்று மக்கள் நம்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தூணே என்றும் வாதிடப்பட்டது.
நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்வைத் தேட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைக் குறிப்பிட்டு, கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
English Summary
Thiruparankundram case HC Madurai Bench TN Govt