'தென்னகத்து துவாரகை' என்று போற்றப்படும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நாளை மகா திருக்குட முழுக்கு..!
The grand consecration ceremony will be held tomorrow at the Mannargudi Rajagopala Swamy Temple
'தென்னகத்து துவாரகை' என்று போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு, ருக்மணி, சத்யபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்தில் பெருமாளும், 'படிதாண்டா பத்தினி' என அழைக்கப்படும் செங்கமலத்தாயார் தனி சன்னதியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இங்கு செங்கமலத்தாயாருக்கு ஆடிப்பூரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றமை பிரசித்தி பெற்றது. சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தலம் புராண சிறப்பும், வரலாற்று பெருமையும் கொண்ட திவ்ய சேத்திரமாக விளங்குகிறது.
அதாவது, மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் விஷ்ணு சேத்திரங்களில் ஒன்றான இத்தலத்தில் ஒரு இரவு தங்கினால் ஆயிரம் பசுதானம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. அதேபோன்று, நான்கு யுகங்களையும் கண்ட பெருமாளாக விளங்கும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, கலியுகத்தில் சரண் அடைவோருக்கு அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

இந்த ஷேத்திரத்தில், பங்குனி மாதத்தில் 18 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில் கிருஷ்ண அவதாரத்தின் 32 சேவைகள் சிறப்பாக நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அத்தோடு, இந்த கோயிலில் 'வெண்ணைத்தாழி திருவிழா' மிகப்பெரும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
அத்துடன், இந்தத் திருக்கோவிலில் காட்சி தரும் ஸ்ரீ சந்தான கோபால பெருமாளை கையில் வாங்கி முகுந்தாஷ்டகம் கூறி வேண்டிக் கொண்டால் நால்வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், திருமணப் பேறு, அரசு பணி மற்றும் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலம், ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர், காஞ்சி மகா பெரியவர் உள்ளிட்ட பல மகான்களாலும், சங் கீத மும்மூர்த்திகளாலும் சிறப்பிக்கப்பட்ட தலமாகும்.

சோழர்கள், நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோவிலில் 24 சன்னதிகள், 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 07 பிரகாரங்கள் மற்றும் 09 தீர்த்தங்கள் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
108 திவ்ய ஹெசங்களில் ஒன்றானஇந்த திருக்கோவிலுக்கு நாளை 28-ஆம் தேதி (புதன்கிழமை) மகா திருக்குட முழுக்கு நடைபெறவுள்ளது. கோபாலனுக்குரிய ரோகிணி நட்சத் திரத்தில், 32 குண்டங்கள் ஐந்து வேதிகைகள் அமைக்கப்பட்டு பாஞ்சராத்திர ஆகம விதி முறைப்படி அர்ச்சக ஸ்வாமிகள் இணைந்து இந்த குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. நான்கு வேதங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் என்று ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் கொண்டாடியதற்கு ஏற்ப எம்பெருமான் நாளை முதல் மீண்டும் அருள்பாலிக்க உள்ளார்.
English Summary
The grand consecration ceremony will be held tomorrow at the Mannargudi Rajagopala Swamy Temple