'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க கோரிய மேல்முறையீட்டு மனு; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறதா..?
The appeal petition seeking a censor certificate for the film Jana Nayagan is being heard in the Supreme Court today
தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப்படமான 'ஜனநாயகன்'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 09 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய் உள்ளது.
கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஜன நாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மருத்துள்ளதோடு, படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'ஜன நாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார்.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். வாஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. அத்துடன், இந்த மேல்முறையீட்டு வழக்கை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், ஜனவரி 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதோடு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் இ.சி. அகர்வாலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தணிக்கை வாரியத்தின் வாதத்தை கேட்காமல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் அம்ரீஷ் குமார் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். கேவிஎன் தயாரிப்பு நிறுவனம், அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The appeal petition seeking a censor certificate for the film Jana Nayagan is being heard in the Supreme Court today