கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசவேண்டும்.. முதலமைச்சருக்கு அதிமுக கோரிக்கை!
The AIADMK demands the Chief Minister to call and speak to the alliance party leaders
கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து முதலமைச்சர் ரங்கசாமி பேச வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து சுமார் ரூ.4,750 கோடி கடனுதவி பெற அனுமதியும், புதுச்சேரி மாநில உள் கட்டமைப்பு வசதிக்காக சுமார் 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கியுள்ள மத்திய பாஜக அரசுக்கு அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சர் அவர்களுக்கும், துணைநிலை ஆளுநர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் படிப்புகளை தவிர்த்து 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தகுதி உடையவர்கள் என புதுச்சேரி அரசு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.
அதிமுகவின் தொடர் கோரிக்கையை ஏற்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் இடஒதக்கீடு வழங்கியுள்ளனர்.
அதே போன்று மருத்துவ கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்கள் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறையில் இயக்குநர் நியமித்ததில் அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் நிர்வாகத்தில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மருத்துவம் தொடர்பாக நியமிக்கப்படுகின்ற எந்த ஒரு உயர் பதவியாக இருந்தாலும் ஆர்டிக்கல் 309-ன் படி மத்திய சுகாதாரத்துறை சேவை விதி 1996 இன் படி நியமிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கடந்த 7-ம் தேதி ஏப்ரல் 2014-ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய இயக்குனர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் ஒரு தரப்பினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது போன்ற செயலால் சுகாதாரத்துறை இயக்குனர் தனது பணியை செய்வதில் சிரமம் ஏற்படும். அட்டவணை இனத்தைச் சேர்ந்த ஒரு நபர் சுகாதாரத்துறையில் இயக்குனர் பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இதை நீதிமன்றம் விசாரணைக்கு கொண்டு செல்வது சரியானதாக இருக்காது. சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் அதில் உள்ள பணி நியமன விதிகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் கூட்டணி தொடர்பாக இப்பொழுது பேசுவது அவசியமில்லை. அந்த தேர்தல் நேரத்தில் அந்தந்த கட்சியினுடைய தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
சில சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி தர்மத்தை மீறி பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவது தவறான ஒன்றாகும். பாஜகவின் அமைச்சராக இருக்க கூடிய ஜான்குமார் அவர்கள் அவருடைய தொகுதி காமராஜர் நகர் தொகுதி. ஆனால் அவர் அதிமுக பலமுறை வெற்றி பெற்ற தொகுதியான முதலியார்பேட்டையில் தான் நிற்பதாக கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதேபோல் ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லஷ்மிநாராயணன் அமைச்சராக உள்ளார். ஆனால் அங்கு பாஜகவின் சார்பாக தான் நிற்க போவதாக பாஜக தலைவர் திரு.ராமலிங்கம் அவர்கள் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகுறார்.
தேர்தல் நெருங்கி வரும் இவ்வேலையில் இது கூட்டணியை பலகீனப்படுத்தும் செயலாகும்.
இது சம்பந்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசுவது அவசியமான ஒன்றாகும்.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சினுடனும் மாண்புமிகு கழகப்பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் கூட்டணி அமைத்தாலும் குறைந்தது 10 தொகுதியில் கழகம் போட்டியிட கழக பொதுச் செயலாளரை புதுச்சேரி அதிமுக வலியுறுத்தும்.
அதிமுக எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் 2 அல்லது 3 இடங்களில் தான் நிற்கும் என பாஜகவினர் சொல்வதாக கேட்கிறீர்கள், வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளை எந்த அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் புறந்தள்ள வேண்டும். எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அந்தந்த கட்சியுனுடைய தலைவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவிப்பார்கள். அதற்கு கட்டுப்பட வேண்டியது அனைவரின் கடமையாகும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
English Summary
The AIADMK demands the Chief Minister to call and speak to the alliance party leaders