பழைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் தமிழர்கள் 10 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது..!
Ten expatriate Tamils who voted in the Tamil Nadu elections using old voter ID cards have been arrested at Chennai Airport
கடந்த 23-ஆம் தேதி 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் இதுவரை தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவிலான 85% வாக்குகள் பதிவாகின. இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர். பணிகள் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
இதில், இறந்தவர்கள், இரட்டை வாக்காளர் அடையாள அட்டை கொண்டவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களின் பெயர்கள் என எல்லாம் நீக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் எழுப்பியபோது, போலியான வாக்காளர்களை நீக்கி சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்தவே இது நடைபெறுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்தலுக்காக பதிவான வாக்குகள் கடந்த மே 04-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், அக்கட்சி திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது.
இதனையடுத்து காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி முதல் கட்சியாக தவெக கூட்டணியில் நிபந்தனைகளுடன் இணைந்தன. அத்துடன், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகியவை நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தது. இதன் மூலம் தவெக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாக்களித்துவிட்டு மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப முற்பட்டபோது சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்த போது, குடியுரிமை அதிகாரிகளின் கண்காணிப்பில் அவர்கள் கைகளில் மை இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள், தேர்தலில் பழைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து வந்துவிட்டு, பின்னர் நாடு திரும்ப வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 10 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Ten expatriate Tamils who voted in the Tamil Nadu elections using old voter ID cards have been arrested at Chennai Airport