மருத்துவக் கல்வியில் நிலவும் சமூக அநீதி... கொந்தளித்த முத்தரசன்.!! 
                                    
                                    
                                   Tamilnadu CPI Mutharasan angry about Medical quota 
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல் மருத்துவம் மற்றும்  மருத்துவக் கல்வியில் முதுகலை பட்டப்படிப்புக்கு மத்திய தொகுப்பில் 13 ஆயிரத்து 238 இடங்கள் உள்ளன.. இதில் மாநில அரசு மருந்துவக் கல்லூரிகள் மத்திய தொகுப்புக்கு வழங்கும் இடங்கள் 8 ஆயிரத்து 833, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 717. 
இது தவிர தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள் வழங்குவது 3 ஆயிரத்து 688 இடங்கள். இந்த இடங்களில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் 2 ஆயிரத்து 386 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முதுநிலை கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் திருத்தம் செய்த பிறகும் 2007 ஆம் ஆண்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு உரிய 27 சதவீத இடங்கள் வழங்கப்படவில்லை.
முதுநிலை படிப்பில் மட்டும் அல்லாமல் இளநிலை பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவக் கல்வியிலும் இந்த சமூக அநீதி தொடர்கிறது. இந்த சமூக அநீதியை தடுத்து முறைப்படுத்த மத்திய அரசு ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. அனைத்து மாநிலங்களும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலிடங்களில் 50 சதவீதத்தை  அகில இந்திய தொகுப்புக்கு கொடுத்து விடுகின்றன. இந்த இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீடு  வழங்க மறுக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, முன்னேறிய வகுப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய தொகுப்பில் உள்ள மொத்த இடங்களிலும் வழங்கப்படும் போது இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவது ‘மனுதர்ம’ சிந்தனையின் வெளிப்பாடாகும்.
இந்த சமூகஅநீதி நடைமுறையால் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதத்திற்கும் அதிகமான இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வெறும் 3.8 சதவீத இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
மருத்துவ கல்வியில் நிலவிவரும் சமூக அநீதியை தடுத்து நிறுத்த சமூகநீதி சார்ந்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய 27 சதவீதம் இடஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்கச் செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள் இதுவரை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. இப் பல்கலைக் கழகங்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சமூக நீதி காக்கும் சட்டப் போராட்டத்தை மாநில அரசு முன்னெடுப்பதுடன், அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நீதி சக்திகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது " என்று கூறியுள்ளார்..    
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Tamilnadu CPI Mutharasan angry about Medical quota