சின்னங்கள் ரெடி...சீட் யாருக்கு...? உள்ளாட்சி தேர்தலுக்கு 20 கூடுதல் சுயேச்சை சின்னங்களை வாரி வழங்கிய தேர்தல் ஆணையம்...!
symbols ready Who gets seat Election Commission distributed 20 additional independent symbols local body elections
உள்ளாட்சி தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டிவரும் நிலையில், அதிகரித்து வரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 20 புதிய சுயேச்சை சின்னங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சின்ன ஒதுக்கீட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அ. சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் வழங்கல்) ஆணை–2025-ன் விதிகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டும் பகுதிகளில், தற்போதுள்ள சின்னங்கள் போதுமானதாக இல்லாத சூழல் உருவாகி வருவதால், கூடுதல் சின்னங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, மட்டையாளர், மணி, பாலம், கேக், கணிப்பான், கேமரா, கேரட், கிரிக்கெட் ஸ்டம்ப், டீசல் பம்ப், உறை, வறுசட்டி, ஐஸ்கிரீம், ரம்பம், இஸ்திரிப் பெட்டி, மிக்சி, அழுத்தக் குக்கர், கூடாரம், கோடரி, கண்ணாடி டம்ளர் மற்றும் கத்தரிக்கோல் ஆகியவை புதிய சுயேச்சை சின்னங்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதனுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் தொடர்பான முந்தைய அறிவிப்பிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியல் எண் 4-ல் இடம்பெற்றிருந்த சின்னம் இனி "தொலைக்காட்சிப் பெட்டி (டி.வி.)" என குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களை சீர்முறையுடனும், குழப்பமின்றியும் நடத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
symbols ready Who gets seat Election Commission distributed 20 additional independent symbols local body elections