சித்ரா பவுர்ணமி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கம்..!!
special bus and train run to thiruvannamalai for sithra pournami
திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் இருந்து 11ஆம் தேதி 1,156 பேருந்துகளும், 12ஆம் தேதி 966 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து 2 நாட்களும் தலா 150 பேருந்துகளும் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 11ஆம் தேதி 1,940 பேருந்துகளும், 12ஆம் தேதி 1,530 பேருந்துகளும் இயக்கப்படும். SETC மூலம் 40 ஏசி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இரண்டு நாட்களும் இயக்கப்படவுள்ளன. இதற்கு TNSTC இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.
மேலும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.
அதேபோல் மறுமார்க்கத்தில் 12, 13-ந் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus and train run to thiruvannamalai for sithra pournami