சென்னை புழல் சிறையில் கஞ்சாவுக்காக போர்: 12 கைதிகள் மீது வழக்கு!
Smoke Scuffles and Security Breaches 12 Inmates Booked Following Cannabis Clash in Puzhal Prison
சென்னை, புழல் மத்திய சிறை என்பது தமிழகத்தின் மிக உயரிய பாதுகாப்பு வளையமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே 'கஞ்சா' தடையின்றிப் புழங்குவதும், அதுவே கைதிகளிடையே பெரும் மோதலாக வெடித்திருப்பதும் தற்போது சிறை நிர்வாகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்தச் சிறையில், சமீபகாலமாகத் தடை செய்யப்பட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குவதாக எழுந்துள்ள புகார்களுக்கு இந்தச் சம்பவம் வலுசேர்த்துள்ளது.
மோதலின் பின்னணி
சிறையின் விசாரணைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள ஒரு தரப்புக் கைதிகள் ரகசியமாகக் கஞ்சா வைத்திருந்ததாகத் தெரிகிறது. இதையறிந்த மற்றொரு தரப்பினர் தமக்கும் கஞ்சா வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். "பகிர்ந்துண்ணுவதில்" ஏற்பட்ட இந்தத் தகராறு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் நிலைக்குச் சென்றது. சிறை காவலர்கள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கைதிகளை மீண்டும் அறைகளில் அடைத்தனர்.
சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை
இந்த வன்முறை தொடர்பாகச் சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், புழல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆனந்த், சின்னத்தம்பி, ராஜேஷ், நரசிம்மன், சக்திவேல், விஜய், கணேஷ்குமார், சூர்யா, நித்தியவேல், விக்னேஷ், கேசவன் மற்றும் மற்றொரு விக்னேஷ்.ஆகிய 12 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது:
தற்போது போலீஸார் ஒரு முக்கியமான கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்: "மிகவும் பாதுகாப்பான சிறைக்குள் கஞ்சா எப்படி நுழைந்தது?" சிறை ஊழியர்களின் துணையுடன் கடத்தப்பட்டதா அல்லது பார்வையாளர்கள் மூலம் கொண்டு வரப்பட்டதா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.
புழல் சிறையில் அடிக்கடி செல்போன்கள் மற்றும் போதைப்பொருட்கள் பிடிபடும் நிலையில், இந்த மோதல் சம்பவம் சிறைத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஓட்டைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. சிறை விதிகளை மீறி வன்முறையில் ஈடுபட்ட இந்தக் கைதிகளுக்குக் கூடுதல் தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
English Summary
Smoke Scuffles and Security Breaches 12 Inmates Booked Following Cannabis Clash in Puzhal Prison