பெற்றோரின் ஓலம்! மர்மமான முறையில் இறந்த பள்ளி மாணவன்...! 2 -வது நாளாக உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு...!
School student dies mysteriously Parents refuse to receive body for 2nd day
திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே NO.1 கொத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் மனைவி நளினி. இந்த தம்பதிக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.இதில் முகிலன் திருப்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மாணவன் முகிலன், பள்ளியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து மிதந்து கிடந்துள்ளான்.

இதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுது துடித்தனர்.அப்போது மாணவனின் தந்தை சின்னத்தம்பி கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து திருப்பத்தூர் தாசில்தான் நவநீதம் முன்னிலையில் காவலர்கள் முகிலனின் பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்த மாணவன் முகிலனின் இறப்புக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி டவுன் போலீஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மாணவனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து. த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
இதில் காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலில் ஈடுபட்டவர்கள் பிடி கொடுக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.இதற்கிடையே மாணவனின் அக்கா வக்கீல் சத்யா தெரிவிக்கையில்,"வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பள்ளி நிர்வாகம் முகிலனை காணவில்லை என தகவல் கொடுத்தது. இதனால் நாங்கள் பள்ளிக்கு சென்றோம். முறையான பதில் கூறவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவை காண்பிக்க சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர்.
அதன் பிறகு காவல் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது முகிலன் பள்ளியிலிருந்து வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது.பள்ளிக்குள் இருக்கும் கிணற்றை பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது.
மேலும், கிணற்றில் யாரும் இறங்க முடியாது என்றனர்.பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் கிணற்றுக்கு எப்படி விழுந்து இறந்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவனின் தலையில் வட்ட வடிவில் முடி பிடுங்கப்பட்டு இருக்கிறது. நெற்றி, முதுகுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. இதனால் முகிலனின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை மாற்ற வேண்டும் " என்று தெரிவித்தார்.
மாணவன் இறந்த விவகாரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.இதில் பள்ளியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கடுமையான சூழ்நிலையில், 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.கூடுதலாக மாணவன் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் வரை முகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
School student dies mysteriously Parents refuse to receive body for 2nd day