சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
Saudi Arabia Commutes Death Sentence of Sri Lankan Tamil Youth
இலங்கையைச் சேர்ந்த 24 வயதான அனோஜன் சிவராசா என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த இந்து புனித யாத்திரையின் போது நாய் ஒன்றை நபர் ஒருவர் உதைப்பது போன்ற காணொளி இணையத்தில் பரவியது. அதில் இந்து கடவுள் குறித்து ஒருவர் இழிவாகப் பதிவிட்டதற்குப் பதிலாக, சிவராசா இஸ்லாம் குறித்துச் சில கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அக் கருத்தை நீக்கி சிவராசா மன்னிப்புக் கேட்டபோதிலும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டுகள் அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.
மரண தண்டனைத் தீர்ப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும்
இதனைத் தொடர்ந்து, ஜூலை 15 அன்று சவுதி நீதிமன்றம் சிவராசாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. பின்னதாக மேல்முறையீட்டில், அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்து அதிர்ச்சியளித்தது.
இந்த விவகாரத்தில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் தியுதீன், ஜீவன் தொண்டைமான், சாணக்கியன் ராசமாணிக்கம் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, சவுதி வெளியுறவு அமைச்சருக்குக் கருணை மனு அளித்தனர். மேலும் சவுதிக்கான இலங்கைத் தூதர் உமர் லெப்பே அமீர் அஜ்வாட் சிறைக்குச் சென்று சிவராசாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மரண தண்டனை ரத்து
சவுதி உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 11 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தூதரக வட்டாரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
English Summary
Saudi Arabia Commutes Death Sentence of Sri Lankan Tamil Youth