மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை வெட்டிய கணவன்: பாளையங்கோட்டையில் கொடூரம்!
Husband Arrested for Brutally Attacking Wife in Palayamkottai
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கூலித் தொழிலாளியான இவர், தினசரி மது அருந்திவிட்டு வந்து மனைவி ராஜகுமாரியுடன் (39) தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பணத் தகராறும் கொடூரத் தாக்குதலும்
சம்பவத்தன்று இரவு ராஜகுமாரி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது, வழக்கம்போலக் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ரமேஷ்குமார் மனைவியிடம் அவதூறாகப் பேசி மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். அதற்கு ராஜகுமாரி தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
ஆத்திரம் தணியாமல் வீட்டிலிருந்த அரிவாள் மனையை எடுத்து ராஜகுமாரியின் மண்டை ஓட்டில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ராஜகுமாரி மயங்கி கீழே விழுந்தார்.
மருத்துவமனை அனுமதி & காவல்துறை நடவடிக்கை
ராஜகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தம்பி முருகன், படுகாயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
இச்சம்பவம் குறித்து ராஜகுமாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற ரமேஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband Arrested for Brutally Attacking Wife in Palayamkottai