வாலிபரை தாக்கி பணம் பறித்த கொள்ளையன் கைது!
Robber arrested for assaulting teenager
பாக்குப்பேட்டை பகுதியில் வாலிபரை தாக்கி பணம்,பைக் பறித்து கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெள்ளேரித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மண்ணுார் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் 8-ஆம் தேதி மாலை போளிவாக்கம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாக்குபேட்டை பகுதியில் அவரை வழிமறித்த குடிபோதையில் வந்த நபர் ஒருவர் ஆபாசமாக பேசி பாக்கெட்டில் வைத்திருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து விக்னேஷ் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மணவாளநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குடிபோதையில் தாக்கிய நபர் போளிவாக்கம் அடுத்த பாக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (29) என தெரிய வந்தது. மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மணவாளநகர் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் சதீஷ்குமாரை பிடிக்க சென்றனர்.அப்போது மாந்தோப்பில் பதுங்கியிருந்த சதீஷ்குமார் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். இதில் தவறி கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
English Summary
Robber arrested for assaulting teenager