விசாரணைக்குச் சென்ற பூசாரி பலி...! ஷூ காலால் தலையில் தாக்கியதாகக் பகீர் குற்றச்சாட்டு...!
priest who went interrogation was killed accused him hitting him on head with his shoe
மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி, வீடு திரும்பிய பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டை காவல்துறை தரப்பு மறுத்துள்ளது.
மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், 52. கோவில் பூசாரியான இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அய்யம்மாளின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் சிந்தாமணி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், கடந்த மாதம் 19-ந்தேதி விசாரணைக்காக பரமசிவத்தை காவல் நிலையத்துக்கு காவலர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை காவலர்கள் தாக்கியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னர் பரமசிவத்துக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை பரமசிவம் திடீரென உயிரிழந்தார்.இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பு பரமசிவம் சில காணொளிகளை பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதில், காவலர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாக தனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தன்னை தாக்கிய காவலர்களே அதற்கு பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த காணொளியில் பரமசிவம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, அய்யம்மாள் தரப்பினர் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.
அதில், பரமசிவத்தின் மரணத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக தெரிவித்தனர்.
குறிப்பாக, காலணியால் அவரது தலையில் பலமாக தாக்கியதாகவும், இதனால் அவர் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாகவும் குற்றம்சாட்டினர்.பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த காவலர்கள், விசாரணையின்போது நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என எச்சரித்து அனுப்பியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
பரமசிவத்தின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், காவலர்கள் தாக்கியதில் பரமசிவம் உயிரிழந்ததாக கூறப்படுவது உண்மையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமசிவத்துக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்ததாகவும், அவர் உயிரிழப்பதற்கு முன்பு பதிவு செய்த காணொளிகளை அவரது குடும்பத்தினர், அவர் இறந்த பின்னர் வெளியிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரமசிவத்தின் மரணத்துக்கான உண்மையான காரணம் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும்.
காவல் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணைகள் மற்றும் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் பரமசிவத்தின் மரணத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
priest who went interrogation was killed accused him hitting him on head with his shoe