மீன் பிடிக்க திருட்டு மின்சாரம்! பெரம்பலூரில் பலியான இளைஞர்கள்!
prambalur electric shock death
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையில், மீன்பிடிக்க மின்சாரம் பயன்படுத்திய இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சேகரின் மகன் தினேஷ் (28), அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் ரஞ்சித் (25) ஆகிய இருவரும், பேச்சாயி அம்மன் கோவிலுக்கருகே உள்ள தடுப்பணையில் நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
தெருவிளக்கில் இருந்து மின்விசை இணைப்பு பெற்று, நெற்றியில் விளக்கு பொருத்திய நிலையில் மீன்களை நேரில் பார்வையிட்டு, மின்சாரத்தை தண்ணீரில் பாய்ச்சும் முறையில் அவர்கள் மீன்பிடித்து வந்தனர். இச்செயல் மூலம் மீன்கள் மயங்கி மேலே மிதக்கும் என நினைத்துள்ளனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தண்ணீரில் அதிக அளவில் பரவியதால், தினேஷும் ரஞ்சிதும் அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்ததும், தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
prambalur electric shock death