பொள்ளாச்சியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயின் பறிப்பு!
Pollachi Chain Snatching
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஒரே ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பெண்களிடம் நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவங்கள் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
தங்கம் என நினைத்து கவரிங் நகையைப் பறித்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்; அவர்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.
நேற்று காலை 10.30 மணியளவில் குளத்துப்புதூர் அருகே சென்ற புவனேஸ்வரி (வயது 30) மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த செயினை அறுத்துச் சென்றனர். அதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காலை 11.30 மணியளவில் குளத்துபாளையத்திலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில், கே.டி.கே மில் அருகே சென்ற முத்துலட்சுமி (35) என்ற பெண் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அதே மர்ம நபர்கள் அவரிடமிருந்த நகையை பறித்து தப்பினர்.
இருவரும் கவரிங் நகைகளை அணிந்திருந்த நிலையில், அவை உண்மையான தங்கம் என எண்ணி குற்றவாளிகள் பறிப்பில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்ததால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஆனைமலை போலீசார் இரண்டு தனிப்பட்ட வழக்குகளாக பதிவு செய்து, நான்கு பேர் கொண்ட சிறப்பு அணியை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.