நகை மோசடி மீதான மிரட்டலுக்கு போலீஸ் கடும் நடவடிக்கை...! - ராம்குமார் தேடும் பணி...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாலதி (35), தன்னிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகளைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரைச் சேர்ந்த ராம்குமார் (36) என்பவரை தளவாய்புரம் போலீசார் 2023 ஆம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கு தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், அதைத் திரும்பப் பெற வற்புறுத்தி ராம்குமார் மாலதிக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சத்யசீலா என்ற பெண் மாலதியை தொடர்பு கொண்டு, தானும் ராம்குமாரின் மோசடிக்கு பாதிக்கப்பட்டவரே என நம்பவைத்து, தன்னுடன் வந்து புகார் அளித்தால் இழந்த நகைகளை மீட்க முடியும் என ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துள்ளார்.

இந்த நம்பிக்கையுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த மாலதியை, ராம்குமார் மற்றும் சத்யசீலா இருவரும் சேர்ந்து, வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மனமுடைந்த மாலதி தளவாய்புரம் காவல் நிலையத்தில் புதிய புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து, ராம்குமார் மற்றும் சத்யசீலா மீது புதிய வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சத்யசீலாவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள ராம்குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட சத்யசீலா, முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ராம்குமாருடன் சேர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

அந்த வழக்கைத் தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது காவல் துறையிலும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police take strict action against threats over jewellery fraud Search Ramkumar underway


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->