போக்சோ கைதி தப்பியோட்டம்...! அலட்சியமாக இருந்த 3 ஆயுதப்படை காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்...!
POCSO prisoner escapes 3 negligent armed police officers suspended
குமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கருதப்பட்ட 3 ஆயுதப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தீபன்ராஜ் (36), தற்போது குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் தீபன்ராஜை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த தீபன்ராஜ், சம்பவத்தன்று காலையில் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது காவலர்களின் கண்காணிப்பில் இருந்து திடீரென நழுவிய தீபன்ராஜ், மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறி தப்பிச்சென்றார்.கைதி தப்பியோடிய தகவல் அறிந்ததும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
தப்பியோடிய தீபன்ராஜை பிடிக்க காவலர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர் நடந்தே சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மேலும், அவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல முயன்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து வழித்தடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதன்மூலம் அவர் சென்ற பாதையை கண்டறிந்து தேடுதல் மேற்கொண்டனர்.இந்த நிலையில், இரவு சுமார் 7 மணியளவில் இரணியல் பகுதியில் தீபன்ராஜை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை ஆசாரிபள்ளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, சிகிச்சையில் இருந்த கைதி பாதுகாப்பை மீறி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கைதியை கண்காணிக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்களான சசிகுமார், ராமஜெயம் மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
POCSO prisoner escapes 3 negligent armed police officers suspended