கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi Diwali Army man
பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை ஆயுதப்படை வீரர்களுடன் இணைந்து ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கொண்டாடினார். கடற்படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்திய பிரதமர், பின்னர் உரையாற்றினார்.
அவரது உரையில், “இந்தியாவின் பாதுகாப்புப்படை வீரர்கள் காட்டும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் நாட்டை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இது ஒரு வரலாற்றுச் சாதனை.
2014க்கு முன் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை வெறும் 11 மாவட்டங்களுக்கு மட்டுமே குறைந்துள்ளன. அவற்றிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் ஆதிக்கம் காணப்படுகிறது. இது பாதுகாப்புப்படை வீரர்களின் வீரமும் மக்கள் ஒற்றுமையும் சேர்ந்து உருவாக்கிய வெற்றி,” என்றார்.
மேலும், “100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இன்று மாவோயிஸ்ட் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றன. இந்த இடங்களில் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி நிலை நிற்கும் வரை நமது போராட்டம் தொடரும்,” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.