வெள்ளத்தில் பாம்பு கடித்து ஒருவர் பலி - 14 பேருக்கு சிகிச்சை.! 
                                    
                                    
                                   one man died for snake bite in floods
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக தூக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்தப் பகுதிகளில் சீரமைக்கும் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் பதினான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் ஐந்து பேர் என்றும் மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், வெள்ளம் சூழ்ந்த வீடுகளை சுத்தம் செய்த பின்பு மக்கள் உள்ளே செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலின் படி, "வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பாம்புகள், பூச்சிகள், விஷ உயிரினங்கள் பதுங்கி இருக்கின்றன. வெள்ளம் வடிந்த வீடுகளுக்கு செல்லும் மக்கள் வீடுகளை சுத்தம் செய்யும் முன்பு உள்ளே உள்ள விஷ உயிரினங்கள் குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். 
பாம்புகள் இருந்தால் அவற்றை வெளியேற்றிய பின்பே சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பாம்புகளை வெளியேற்ற நீண்ட கம்புகளை பயன்படுத்த வேண்டும். கொடூர விஷமுள்ள பாம்புகள் இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் வெளியேற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       one man died for snake bite in floods