ஆக்ரா ரயிலில் சூட்கேசில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்; கூடுவாஞ்சேரியில் சிக்கிய ஒடிசா தம்பதிகள்; தலையை தேடும் போலீசார்; வெட்டி சமைத்துள்ளதற்கான தடயம்..?
Odisha couple arrested in Kuduvancheri over body parts found in suitcase on Agra train
ஆக்ரா ரயிலில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கூடுவாஞ்சேரி அருகே கொலை செய்துவிட்டு அதை மறைத்து கொண்டு சென்றுள்ளமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 05-ஆம் தேதி, ஆக்ராவுக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், சிதைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச ரயில்வே மற்றும் காவல் துறை, தமிழ்நாடு ரயில்வே காவல் துறையின் உதவியை நாடி விசாரணையை தீவிரப்படுத்தியது. அதன்படி, ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேசுடன் சென்னை சென்ட்ரயிலுக்குள் நுழைவதை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் சூட்கேஸை ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரியில் இறங்கியது தெரியவந்துள்ளது.
அதனை கொண்டு, கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து குறித்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சென்ற போலீசார் தேடுதல் நடத்தியுள்ளனர். அங்கு, ஒருவரை கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய பாத்திரத்தில் அசைவ உணவு சமைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சமைத்த உணவில் மனித உறுப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அந்த பாத்திரத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மணிக் உதின் லஷ்கர் (40), மஞ்சி (35), ஹையத்துன் நிஷா (38) வசித்தது வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அளவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தம்பதியருடன், கொலை செய்யப்பட்ட பெண் சேர்ந்து மூவருமாக ஒன்றாக தங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஹையத்துன் நிஷா என கூறப்படுகிறது.

குறித்த பெண் தாம்பரம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி 19 வயதில் மகன் இருப்பதையும் அறிந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஹையத்துன் நிஷாவின், தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் போலீஸார் தலையைத் தேடி வருகின்றனர். ஒடிசாவைச் சேர்ந்த தம்பதிகள் மணிக் உதின் லஷ்கர், மஞ்சியை போலீஸார் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Odisha couple arrested in Kuduvancheri over body parts found in suitcase on Agra train