பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட முதல்வர் விஜய் முடிவு? மாற்று இடம் தேட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
Has Chief Minister Vijay decided to drop the Parandur airport project Officials instructed to look for an alternative site
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூரில்தான் தனது கள அரசியல் பயணத்தை தொடங்கியதாக விஜய் தொடர்ந்து கூறிவரும் நிலையில், விமான நிலையம் அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 3,774 ஏக்கர் நிலம் தனியார் வசம் இருப்பதால், நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.
ஆனால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு விஜய்யும் தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வந்தார்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை எந்த இறுதி முடிவையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையே பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள், விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு ஆதரவாக விஜய்க்கு நன்றி தெரிவித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக விஜய் தனது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெளிவாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “எனது கள அரசியல் தொடங்கியதே பரந்தூரில்தான். அந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்?” என்று விஜய் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்றும், பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்றும், அதனால் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக மாற்று இடத்தைத் தேடுமாறும் முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாக இருந்தால், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் இது மிகப்பெரிய திருப்பமாக அமையும். அதேநேரத்தில், விமான நிலையம் அமையும் என்ற எதிர்பார்ப்பில் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களிடையேயும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Has Chief Minister Vijay decided to drop the Parandur airport project Officials instructed to look for an alternative site