திமுகவா? நாம் தமிழரா? மோதிப்பார்த்துவிடலாம் - சீமான் போர்க்கொடி.! - Seithipunal
Seithipunal


இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உழவு இல்லையேல் உணவு இல்லை! உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை! – என்று உணர்த்தியவர். விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்! – என்று கற்பித்தவர். செயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே! – என்று உயிர் வலித்தவர். இயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர். தன்னை நேசிக்காது தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 30-12-2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது". இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் உறவுகளும் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பில், " மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த அவர்களும் அவரது குடும்பத்தினரும் கருதுவது போல அவரது உடல்நலன், மனஅமைதி முதன்மையானது. இதனை ஏற்கனவே நானும் பலமுறை பதிவு செய்திருந்தேன். கடந்த காலங்களில் அவர்மீது பெருமதிப்பு வைத்திருந்த ரசிகர்களில் ஒருவன் நான்; ஆனால் அரசியல் ரீதியாக வரும்போது கடும்விமர்சனங்களை கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அது அவரையோ அவரது குடும்பத்தினரையோ ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் நான் பெரிதும் வருந்துகிறேன். இனி எப்போதும் அவர் எங்கள் புகழ்ச்சிக்குரியவர். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் ஆகப்பெரும் திரைஆளுமை அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆசிய கண்டம் முழுமைக்கும் அவர் புகழ் வெளிச்சம் பரவிக்கிடக்கிறது. தமிழர்கள் அவரைப் பெரிதும் கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரைக் கொண்டாடுவோம். அரசியல் அவருக்கு அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எதிர்த்ததனால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லமுடியாது. ஆனால் எப்படி பாரத்தாலும் அவரது முடிவு வரவேற்கத்தக்கது; மனதார பாராட்டுகிறேன்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் நாம் தமிழர் உறவுகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். நான் போட்டியிடவிருக்கும் தொகுதியை மரியாதைக்குரிய ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் முடிவுசெய்யவேண்டும்.அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியில் நானும் போட்டியிடவிருக்கிறேன். இனி திமுக-வுக்கு மாற்று அதிமுக அல்ல; திமுக-வுக்கு மாற்று நாம் தமிழர் தான் என்பதை உருவாக்குவோம்! திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா தமிழரா என்று மோதிப் பார்த்துவிடுவோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK 30 Dec 2020 Report


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->