வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை..புதுவை சுகாதாரத் துறை புதிய உத்தரவு!
Northeast monsoon alert Puducherry health department new directive
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல் கூட்டு நடவடிக்கையாக, வாரந்தோறும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நாட்டுநல பணித்திட்ட மாணவர்கள்- ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளின் சார்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவக்கூடிய நோய்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து புதுவை அரசு சுகாதாரம் மற்றும் நலவழி துறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை மக்களுக்கு பரிந்துரை செய்கிறது.
1. டெங்கு மற்றும் கொசு மூலம் பரவக்கூடிய நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல் கூட்டு நடவடிக்கையாக, வாரந்தோறும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நாட்டுநல பணித்திட்ட மாணவர்கள்- ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளின் சார்பாக நடைபெற்று வருகிறது.
2. பொதுமக்கள் அனைவரும் சாலையோரம் விற்கப்படும் அசுத்தமான முறையில் தயாரித்த உணவுகளை தவிர்த்து, சுகாதாரமாக சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளவும், சுகாதாரமான குடிநீரை மட்டுமே பருகும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சிய பின் அருந்துதல் மிகவும் சிறந்ததாகும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பை தவிர்க்க முடியும்.
3. வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி ORS எனப்படும் சர்க்கரை உப்பு நீர் கரைச்சலை கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு பாக்கெட் ORS பொடியை ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான குடிநீரில் கரைத்து கொடுக்க வேண்டும்.
வீட்டிலேயே எளிய முறையில் ORS தயார் செய்யலாம்.
* முதலில், கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். அதேபோல, கரைசல் தயார் செய்யவிருக்கும் பாத்திரத்தையும் சுத்தமாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
* சுத்தமான கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் - 1 லிட்டர், சர்க்கரை - 6 டீஸ்பூன்(1 டீஸ்பூன் = 5 கிராம்), தூள் உப்பு - அரை டீஸ்பூன் என இந்த அளவுகளில் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். நீர்ச்சத்து இழப்புக்கு ஆளானவருக்கு இதை அடிக்கடி பருகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
* கரைசல் தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், இதே முறையில் புதிய கரைசல் தயாரித்துக்கொள்ள வேண்டும். 4. வீட்டை விட்டு வெளியில் சென்று வரும் பொழுதும், உணவு அருந்துவதற்கு முன்பும், மலஜலம் கழித்த பின்பும் கைகளை நன்கு சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதன் மூலம் மழைக்காலத்தில் பரவக்கூடிய பெரும்பாலான நோய்களை தவிர்த்து கொள்ளலாம்.
5. அனைத்து மருத்துவமனைகளிலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருந்துகளும் போதிய அளவு இருப்பில் உள்ளதாகவும், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் புதுவை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் உருவாக்கும் ஏடிஸ் வகையான கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் கொசு கடிக்காத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் ஜன்னல்களில் வலைகள், கொசு விரட்டி, மூலிகை கொசு விரட்டிகள் முதலானவைகளை பயன்படுத்துவதன் மூலம் உள்ளே கொசு வராமல் தடுக்கலாம். டெங்கு நோய் உருவாக்கும் கொசுக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் நிகழ்வு (DSR ) மூலமாகவே . வாரம் ஒரு முறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர்தினம் ( Weekly Dengue Day- Dry day) கடைப்பிடிப்பதன் மூலம் கொசு புழுவின் வளர்ச்சியை தடைபடுத்தி இதன் மூலமாக டெங்கு பரவுவதை தடுக்க இயலும்.
ஆகவே 'சுத்தமான கைகள், சுத்தமான குடிநீர், சுத்தமான உணவு, சுத்தமான சுற்றுப்புறம்' என்பதில் கவனம் செலுத்தி
மக்கள் விழிப்புணர்வுடன் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை காரணமாக பரவக்கூடிய நோய்களை பரவாமல் மேற்கூறிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தந்து அவர்களையும் தங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க புதுவை அரசுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப இயக்குனர் தெரிவித்துள்ளார்.
English Summary
Northeast monsoon alert Puducherry health department new directive