பவுர்ணமி இரவுகளில் இனி தங்க தடை...! திருச்செந்தூர் கடற்கரையில் கோவில் நிர்வாகத்தின் கடும் நடவடிக்கை...!
No more staying overnight on full moon nights Strict action by temple administration Tiruchendur beach
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருத்தலம், ஆன்மீக மகிமையும் கடற்கரை அழகும் ஒன்றிணைந்த திவ்ய தலமாகத் திகழ்கிறது. இங்கு தான் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து, தெய்வானையுடன் திருமணம் புரிந்தார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனிடையே, சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு ஜோதிடர் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி, மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் அபரிமித பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவி, பவுர்ணமி இரவுகளில் கடற்கரை மக்கள் கூட்டத்தில் நெரிசலாகி வருகின்றது.
ஆனால் சமீபத்தில் இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள், பொருட்கள் காணாமற்போனது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோவில் நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி, இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருச்செந்தூர் கடற்கரையில் யாரும் தங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் பணியாளர்கள், காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழுவினர் இணைந்து கடற்கரை பகுதியில் தங்கி இருந்த பக்தர்களை அப்புறப்படுத்தினர்.மேலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு, பக்தர்கள் கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகம் மற்றும் அருகிலுள்ள மண்டபங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தற்போது அய்யா கோவில் வரை 500 மீட்டர் சுற்றளவில் கடற்கரை முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் வழக்கமாக பவுர்ணமி இரவில் மக்கள் கூட்டம் நிரம்பிய திருச்செந்தூர் கடற்கரை, இம்முறை வெறிச்சோடி காணப்பட்டு, சாந்தமான நிலவொளி மட்டும் சாட்சியாக இருந்தது.
English Summary
No more staying overnight on full moon nights Strict action by temple administration Tiruchendur beach