நகை கடன் திட்டத்தில் புதிய வழிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா( RBI) கொண்டு வந்துள்ள நகை கடன் திட்டத்தில் புதிய வழிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். ஏழை, எளிய விவசாய மக்கள் எளிதில் கடன் வாங்கக்கூடிய நகை கடன் திட்டத்தை  எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கட்சி தேசிய செயலாளர் டாக்டர். கே. நாராயணா, மாநில செயலாளர் சலீம்,மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் உட்பட மாநிலங்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  புதுச்சேரி மாநிலக்குழு நிறைவேற்றிய,

- தீர்மானங்கள்:- 

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்சனையில் முதல் அமைச்சர் ஒன்றிய *பிஜேபி அரசுக்கு எதிராக போராட முன் வரவேண்டும் 

      புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து குறித்து போராடி வந்துள்ளது. தனக்கு நிர்வாக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து கொள்வது முதல் அமைச்சரின் வழக்கம்.

      கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து எழுப்பிய வினாவிற்கு  மாநில அந்தஸ்து வழங்க சாத்தியமில்லை ஒன்றிய பிஜேபி அரசு  பதில் அளித்தது. மேலும் புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதுவும் ஒன்றிய அரசுக்கு வரவில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

      ஆனால் மாநில முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து குறித்து தீர்மானம் நிறைவேற்றிய போது ஒன்றிய அரசை வலியுறுத்த தில்லிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பிரதிநிதிகளை தில்லிக்கு அழைத்து சென்று வலியுறுத்துவோம் என்று கூறினார். ஆனால் அது அறிவிப்புடன் நின்றது. முதல் அமைச்சரும் தில்லி சென்று மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தவில்லை. ஆனால் இப்போது திடீரென மாநில அந்தஸ்து குறித்து முதல் அமைச்சர்  பேசுவது வேடிக்கையாக உள்ளது.

        மாநில அந்தஸ்து வழங்க இயலாது என்று அறிவித்த பிஜேபியுடன் கூட்டணி அமைத்து கொண்டு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என்று கூறுவது மக்களை ஏமாற்றுவது.

        மாநில அந்தஸ்து பிரச்சனையில் முதல் அமைச்சருக்கு அக்கறையிருந்தால் முதலில் மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் பிஜேபி கூட்டணியிலிருந்து வெளிவந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

 அரசு துறைகளில் பெருகி வரும் ஊழல்களை தடுத்திட லஞ்ச ஒழிப்பு பிரிவு முனைப்புடன் செயல்பட வேண்டும் 

  புதுச்சேரி மாநிலத்தில் அண்மைக் காலமாக அரசு துறைகளில் பணியாற்றக்கூடிய உயர் அதிகாரிகளில் பலர் லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கி மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      உதாரணமாக காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர், பத்திரபதிவு துறை பதிவாளர், காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கில் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் ஊழியர்கள், லஞ்சம் பெறும்போது பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் இருவரும் கையும் களவுமாக மத்திய புலனாய்வு துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  சுகாதார துறை மருந்து கொள்முதல் ஊழல், கலால் துறை ஊழல், பத்திரப்பதிவு துறை சார்பதிவாளர்கள் மீது போலிப்பத்திர பதிவு ஊழல் என பல்வேறு முறைகேடு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஊழல் முறைகேடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் நேரடி கண்காணிப்பில் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை தனியாக இருந்தும் கூட முழு நேர காவல் கண்காணிப்பாளர் மற்றும் உரிய அதிகாரிகள் இன்றி அந்த துறை தன்னிச்சையாக முனைப்புடன் செயல்பட முடியாத நிலை உள்ளது.

எனவே புதுச்சேரியில் ஊழலற்ற நிர்வாகம் தொடர்ந்திட லஞ்ச ஒழிப்பு துறையை முனைப்புடன் செயல்பட செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 புதுச்சேரி அரசு பணியாளர் தேர்வுகளில் இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைய அமலாக்கப் பிரிவை வலுப்படுத்த வேண்டும் 

  புதுச்சேரி அரசு துறைகளில் ஏற்படுகின்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புகின்ற போது சட்ட ரீதியாக பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்படுகின்ற இட ஒதுக்கீடு முறையில் ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளால் முன்னேறிய வகுப்பினர் பலன் பெறுவதும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை இழப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் ஆண்டு தோறும் துறை வாரியாக பதவி வாரியாக ஏற்படக்கூடிய பணியிடங்களை கணக்கிட்டு அதற்கேற்ப ரோஸ்டர் பாயிண்ட் தயாரித்து அளிக்கக்கூடிய அமலாக்கப் பிரிவு சரிவர செயல்படாதது தான் காரணம்.

    ஒன்றிய அரசு துறைகளிலும், தமிழ் நாடு அரசு துறைகளிலும் ஒவ்வோரு ஆண்டும் ஏற்படும் காலியிடங்களை அடுத்த ஆண்டே தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது இதற்கென தனியாக சட்டப்பூர்வமான தேர்வாணையம் சுயேட்சையாக இயங்கி வருகிறத,ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டித் தேர்வுகளை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை மூலம் மேற்கொள்வதால் பல குழப்பங்கள் ஒவ்வொரு தேர்விலும் நடைபெறுகிறது.

        எனவே புதுச்சேரி அரசு ஆண்டு தோறும் ஏற்படுகின்ற காலி பணியிடங்களை போட்டி தேர்வு நடத்த மாநில பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தவும், பல்வேறு பிரிவினருக்கான சட்டரீதியான இட, ஒதுக்கீடு உரிமையை எவ்வித குளறுபடியும் இல்லாமல் வழங்கிட ரோஸ்டர் பாயிண்ட் தயாரிக்கவும் தலைமை செயலகத்தில் அமலாக்கப் பிரிவு முனைப்புடன் செயல்படவும் புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு இந்திய கமயூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

 புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் தீர்மானங்கள் :- 

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா( RBI) கொண்டு வந்துள்ள நகை கடன் திட்டத்தில் புதிய வழிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். ஏழை, எளிய விவசாய மக்கள் எளிதில் கடன் வாங்கக்கூடிய நகை கடன் திட்டத்தை  எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும்.

இயங்காமல் உள்ள மூன்று பஞ்சாலைகளை நினைத்து ஜவுளி பூங்கா அமைத்திடுக 

    புதுச்சேரியில் இயங்காமல் உள்ள ஏஎப்டி பஞ்சாலை வளாகத்தில் ஜவுளி பூங்கா ஏக்தா மால் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என துணைநிலை ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ள சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது மாநில அரசின் பணி என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளது. 

‌.  தமிழக அரசு சிறிய ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கென 100 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

    இது தொழில் முனைவோர்களுக்கு ஜவுளி பூங்காக்களில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை காட்டுகிறது. 

   சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் ஜவுளி பூங்கா 15000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

    ஜவுளி பூங்காக்கள் அமைப்பதன் மூலம் ஜின்னஸ் தொழிற்சாலைகள் அமைவதற்கும், பருத்தி உற்பத்திக்கும் வழி வகுக்கும். 

   எனவே சுதேசி பாரதி ஆலைகளுக்கு சொந்தமான இடங்களையும் இணைத்து, முன்னுரிமை அடிப்படையில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட இந்த மாநில குழு கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

 தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தை ஏற்க மறுக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி இயக்கம் 

புதுச்சேரி அரசு கடந்த2020 -21 ஆம் ஆண்டு முதல் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வித் திட்டத்தை அமுல்படுத்தி  வருகிறது .

இத்திட்டத்தால் புதுச்சேரி மாநில SC/ST மாணவர்கள் பெருமளவில் பயன்பெற்று வருகிறார்கள். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்கள், உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் திட்டத்தை ஏற்க மறுக்கிறார்கள்.

இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 கோடிக்கும் மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலமாக ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள்  வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் நலத்துறையில் உள்ள நிர்வாக குளறுபடியின் காரணமாக ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தில் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் ஆண்டின் இறுதியில் வழங்கும் நிலை உள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்கள் எஸ்சி எஸ்டி மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை ஆண்டின் துவக்கத்திலேயே கட்டிட கட்டாயப்படுத்துவதும், புத்தகம் வழங்க மறுப்பதும், சேர்க்கை மறுப்பதும், SC/ ST மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பது என ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக உள்ளது.

இது சம்பந்தமாக முதலமைச்சர் நலத்துறை செயலர் நலத்துறை இயக்குனர் என அனைவரின் கவனத்திற்கு கடிதம் மூலமாகவும், நேரில் முறையிட்டும் பயனில்லை 

தனியார் கல்வி நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எனவே இலவச கல்வி திட்டத்தை முழுமையாக ஏற்காத செயல்படுத்தாத புதுச்சேரியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யவும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நலத்துறை செயலர் நலத்துறை இயக்குனர் ஆகியோர்களை கண்டித்து  மக்களை திரட்டி மாபெரும் இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New procedures in the jewelry loan scheme must be immediately abandoned Urging of the Indian Communist Party


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->