நத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கொடூர விபத்து... ஒரு பெண் பலி, மாணவ-மாணவிகள் படுகாயம்!
naththam auto bus accident
திண்டுக்கல்: நத்தம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், 8 மாணவ-மாணவிகள் உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் பயணித்தனர். பூதகுடியைச் சேர்ந்த சந்திரன் (வயது 53) இயக்கிய அந்த ஆட்டோவில் மொத்தம் 12 பேர் பயணித்தனர்.
நத்தம் அம்மன் குளம் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த அரசுப் பேருந்து ஆட்டோவின் பக்கவாட்டில் பலமாக மோதியது. தாக்கத்தின் அதிர்ச்சியில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது. இதில், திவ்ய ஶ்ரீ (வயது 17), குகன் (வயது 14), சாருமதி (வயது 15), மவுனிகா (வயது 16), ஹரிணி ஶ்ரீ (வயது 15), ரியாராஜ் (வயது 13), பூமிகா (வயது 16), கோகிலா (வயது 17), திருப்பதி, சாகுல்ஹமீது மற்றும் ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு சிறிய காயங்களும், சிலருக்கு தலையில் தீவிர காயங்களும் ஏற்பட்டன.
மேலும், மேலூர் சின்ன கற்பூரம்பட்டியைச் சேர்ந்த நைனம்மாள் (43) பலத்த காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தலையில் தீவிர காயம் அடைந்த திவ்ய ஶ்ரீ மற்றும் குகன் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களை ஏற்றிய ஆட்டோ மீது பேருந்து மோதிய இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
naththam auto bus accident