நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம்!
Nagaland Governor L Ganeshans body cremation
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் செய்யப்பட்டது.தேசிய கொடி போர்த்தப்பட்ட சந்தனப் பேழையில் இல.கணேசனின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்தனர்.
நாகாலாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் , கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் இல.கணேசனை,வீட்டில் மயங்கி விழுந்த போது அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து தியாகராயநகரில் வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உடலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சக்கரவத்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடந்து இல.கணேசனின் உடல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைக்கப்பட்டது. அப்போது தேசிய கொடி போர்த்தப்பட்ட சந்தனப் பேழையில் இல.கணேசனின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்தனர். பின்னர் இல.கணேசன் உடலுக்கு நாகாலாந்து முதல்-மந்திரி நைபியு ரியோ, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இல.கணேசன் உடலுக்கு முப்படை தலைவர்களால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை 42 துப்பாக்கி குண்டுகளை வான் நோக்கி சுட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இல.கணேசனின் உடலுக்கு குடும்பத்தார்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
English Summary
Nagaland Governor L Ganeshans body cremation