தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் படுகொலை வழக்கு...! - 2 பேருக்கு அதிரடியாக 'ஆயுள் தண்டனை' விதிப்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மாவீரன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி (23) கொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட இரு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மாவீரன் நகர் கந்தன் சாலையைச் சேர்ந்த வெண்ணிமுத்துவின் மகனான கருப்பசாமி, தனியார் தொழிற்சாலையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்ட இரு வேறு சந்தர்ப்பங்களில் மது அருந்தியபோது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) மற்றும் கனகராஜ் (25) ஆகியோருடன் அவருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த சம்பவங்களின் போது கருப்பசாமி தங்களை தாக்கியதாகக் கருதிய விஜயகுமாரும் கனகராஜும், மனதில் பகையை வளர்த்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் கொலைத் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.அதன்படி, 2016-ஆம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி இரவு, திட்டமிட்டபடி கருப்பசாமியை மாவீரன் நகரில் உள்ள அருந்ததி கலையரங்கம் அருகே விஜயகுமார் வரவழைத்துள்ளார்.

அங்கு சென்ற கருப்பசாமியை இருவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தித் தாக்கியுள்ளனர்.பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை அருகில் இருந்த உடைமரப் பகுதியில் மறைத்து வைத்து விட்டு இருவரும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.மகன் காணாமல் போனதைத் தொடர்ந்து, கருப்பசாமியின் தந்தை வெண்ணிமுத்து, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதைய ஆய்வாளர்கள் ஆடிவேல் மற்றும் ரெகுராஜன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், குற்றச்செயலில் தொடர்புடைய விஜயகுமார் மற்றும் கனகராஜ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்–2-ல் நடைபெற்று வந்தது. சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் முடிவு செய்தது.இதையடுத்து நீதிபதி எம். பிரீதா வழங்கிய தீர்ப்பில், முதல் குற்றவாளி விஜயகுமாருக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, சட்டவிரோதமாக அடைத்து வைத்த குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் மற்றும் குற்றத்திற்கான தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றவாளியான கனகராஜுக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சதித்திட்டம் பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைகள் ஒரே காலகட்டத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

murder case sanitation worker Thoothukudi 2 people sentenced life imprisonment


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->