இனி ஆபீஸ்க்கு போக வேண்டாம்...! வீட்டிலிருந்தே ஆவணப்பதிவு...! - தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்...!
No more going office Document registration from home drastic change brought by Tamil Nadu government
ஆவணப் பதிவை எளிதாக்கும் நோக்கில் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ள “வருகை இல்லா ஆவணப்பதிவு” முறையை விரைவில் கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில் முழுமையான இணையவழி சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம், பொதுமக்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் இணையதளத்தின் வாயிலாக தங்களது ஆவணங்களை பதிவிற்காக சமர்ப்பிக்க முடியும். ஆண்டின் அனைத்து நாட்களிலும், நாளின் அனைத்து நேரங்களிலும் இந்த சேவையை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆவணம் ஆய்வு செய்யப்பட்டு சார்பதிவாளரின் ஒப்புதல் கிடைத்தவுடன், மின்னணு கையொப்பத்துடன் கூடிய பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் பயனர் கணக்கிற்கும், அவர்களின் அலைபேசி எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அந்த ஆவணத்தை பயனாளர்கள் தங்களது உள்நுழைவு கணக்கின் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இணையவழியில் பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்
முதல்முறை மனை விற்பனை ஆவணங்கள்
முதல்முறை அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்கள்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
வங்கிக் கடன்களுக்கான அடமான ஆவணங்கள் மற்றும் இரசீது ஆவணங்கள்
பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கான வழிமுறைகள்
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வங்கிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது தனிப்பட்ட உள்நுழைவு கணக்கின் மூலம் ஆவணங்களை உருவாக்கி நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கலாம்.ஆவணத்தில் இடம்பெறும் எழுதிக் கொடுப்பவர், எழுதிப் பெறுபவர் மற்றும் சாட்சிகள் உள்ளிட்ட அனைவரின் ஆதார் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.மேலும், ஆதார் அங்கீகாரத்திற்காக கைரேகை அல்லது கருவிழிப் பதிவு மூலம் அடையாளச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான தொழில்நுட்ப வசதிகள்
தடையற்ற இணைய இணைப்பு
ஆதார் அங்கீகாரம் பெற்ற விரல் ரேகை பதிவு கருவி
கருவிழி அடையாளப் பதிவு சாதனம்
இணையப் புகைப்படக் கருவி
இணையவழி ஆவணப்பதிவு நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் புதிய நடைமுறைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
No more going office Document registration from home drastic change brought by Tamil Nadu government