பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லா...? தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு விழுந்த சட்டத்தின் சாட்டை...!
mind fool crazy mind child stone whip law fell 3 sons who did not pay attention their father
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 84 வயது முதியவரின் பராமரிப்பு வழக்கில், தந்தைக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் அலட்சியம் காட்டிய மூன்று மகன்களுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி (84), மனைவி உயிரிழந்த பின்னர் தனது மகன்களான வரதராஜன், திருமுருகன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் திருப்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார்.

வயது முதிர்ந்த நிலையில் தன்னை கவனித்துக்கொள்ளாமல், தேவையான உதவிகளையும் வழங்காமல் மகன்கள் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி, கடந்த 2018-ஆம் ஆண்டு காரைக்கால் சார்பு நீதிமன்றத்தை அவர் நாடினார்.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று மகன்களும் தங்களது தந்தைக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும், உத்தரவை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது.
தொடக்கத்தில் நீதிமன்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மகன்கள், பின்னர் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மகன்களில் ஒருவரான திருமுருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.அதன்பிறகும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலையில், மீண்டும் சட்டப்போராட்டத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த வழக்கில் இதுவரை இறுதி விசாரணை நடைபெறவில்லை.இந்த சூழலில், 2018 முதல் 2026 வரை சுமார் 71 மாதங்களாக நீதிமன்றம் உத்தரவிட்ட பராமரிப்புத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி முனுசாமி மீண்டும் காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தற்போதைய மாவட்ட துணை ஆட்சியரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பூஜா, தந்தைக்கு வழங்க வேண்டிய தொகையை செலுத்தாததோடு, நீதிமன்ற உத்தரவையும் தொடர்ந்து மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று மகன்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதி, மூன்று பேருக்கும் தலா ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், முதியவர் கோரியுள்ள நிலுவை பராமரிப்புத் தொகையை முழுமையாக வழங்காத பட்சத்தில், சிறைத் தண்டனை தொடரும் என்றும் தீர்ப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூவரையும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி பூஜா, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
வயதான பெற்றோரை பராமரிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல, மனிதநேயப் பொறுப்பும் ஆகும் என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த தீர்ப்பு கவனம் ஈர்த்துள்ளது.
English Summary
mind fool crazy mind child stone whip law fell 3 sons who did not pay attention their father