சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் தென்னரசுக்கு எதிரான வழக்கு இன்று முதல் விசாரணை.!
minister thennarasu property case hearing from today
சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை இன்று நடத்த உள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று, நாளை மற்றும் மார்ச் 5-ஆம் தேதி உள்ளிட்ட நாட்களில் நடைபெறும் என்று அறிவித்தார். இதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளிலும், அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8-ம் தேதி வாதங்களை தொடங்கி 11-ம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
minister thennarasu property case hearing from today