நடுவானில் தீ விபத்து எதிரொலி...! விமானங்களில் குறிப்பிட்ட வகைப் பவர் பேங்குகளுக்கு அதிரடி தடை...! - சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை...!
Mid air fire incident echoes Strict ban certain types power banks on flights Intensive checks Chennai airport
விமானப் பயணத்தின்போது எடுத்துச் செல்லப்பட்ட மின்கலச் சேமிப்புக் கருவியால் நடுவானில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட குறிப்பிட்ட வகைக் கருவியை விமானங்களில் எடுத்துச் செல்ல விமானப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு சென்னை விமான நிலையத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் உடைமைகள் தீவிரமாகச் சோதனையிடப்படுகின்றன.டெல்லியில் இருந்து கடந்த 11-ஆம் தேதி, 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னைக்குப் புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கான உள்பகுதியில் திடீரெனத் தீப்பற்றியது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, விமானம் உடனடியாக ஐதராபாத்துக்குத் திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 180 பேரும் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், பயணி ஒருவர் வைத்திருந்த மின்கலச் சேமிப்புக் கருவியிலிருந்தே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், அந்தக் கருவி போதிய பாதுகாப்புத் தரம் இல்லாத வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, குறிப்பிட்ட வகைக் கருவியால் மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அதை விமானங்களில் எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மொபிகின்ஸ் நிறுவனத்தின் எம்.கே.-பி.பி.-04 வகை மின்கலச் சேமிப்புக் கருவியை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களிலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களிலும் எடுத்துச் செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தக் கட்டுப்பாடு பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கைப்பைகளுக்கும், விமானத்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கும் பயணப்பெட்டிகளுக்கும் பொருந்தும்.
சரக்கு விமானங்களிலும் இந்தக் கருவியைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடு சென்னை விமான நிலையத்திலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் உடைமைகளை முழுமையாகச் சோதனை செய்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட வகைக் கருவிகள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதைக் கண்டறியக் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், விமானப் பயணத்தின்போது பாதுகாப்புத் தரம் உறுதிப்படுத்தப்பட்ட மின்கலச் சேமிப்புக் கருவிகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவற்றை விமானத்துக்குள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கைப்பையில் மட்டுமே வைக்க வேண்டும் என்றும், விமானத்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கும் பயணப்பெட்டிகளில் வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுவானில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் சோதனைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Mid air fire incident echoes Strict ban certain types power banks on flights Intensive checks Chennai airport