பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே அதிர்ச்சி...! 7 வயது சிறுமி ஹேமாவதி மாயம்...! - 100+ போலீசார், 50 டிரோன்கள் உடன் செஞ்சியில் பரபரப்பு தேடுதல் வேட்டை!
Shocking news day after her birthday 7 year old Hemavathy disappears 100 police officers 50 drones conduct frantic search Senji
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் களமிறங்கியுள்ள நிலையில், மலைக்குன்றுகள், குகைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகளான ஹேமாவதிக்கு 7 வயது ஆகிறது.கடந்த 11-ஆம் தேதி ஹேமாவதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பின்னர், இரவு வழக்கம்போல் பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் எழுந்த பெற்றோர், அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடியுள்ளனர். நீண்ட நேரமாகியும் ஹேமாவதி கிடைக்காததால், இதுகுறித்து காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமியின் மாயம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரிக்க முதற்கட்டமாக எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுவினர் கிராமம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிறுமி காணாமல் போனதற்கான காரணம் என்ன, அவர் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது குறித்து பல்வேறு தடயங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சிறுமியின் வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று நாட்களாகத் தொடர்ந்து தேடியும் சிறுமி கிடைக்காததால், நான்காவது நாளாக நேற்றும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரின் விவரங்களைச் சேகரிக்கும் காவலர்கள், வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தடயங்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் என அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறைகளின் இடுக்குகள் உள்ளிட்ட மறைவிடங்களிலும் சிறுமி இருக்கிறாரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக 50 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு, ஆள்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளும் வான்வழியாகக் கண்காணிக்கப்படுகின்றன.காவலர்களுடன் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலம்பூண்டி மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளிலும் இறங்கி சிறுமியைத் தேடி வருகின்றனர்.மேலும், ஆழமான பெரிய கிணறுகளில் தேடுவதற்காக மரக்காணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் கிணறுகளின் ஆழமான பகுதிகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுமி மாயமானது தொடர்பாகத் தொலைபேசி அழைப்பு விவரங்கள், செல்போன் கோபுரத் தரவுகள் உள்ளிட்ட தகவல்களையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து, விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருப்பினும், சிறுமி மாயமாகி ஐந்து நாட்களைக் கடந்தும் அவரைப் பற்றிய உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால், ஹேமாவதி எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகள் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.ஏற்கனவே ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் எட்டு தனிப்படைகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Shocking news day after her birthday 7 year old Hemavathy disappears 100 police officers 50 drones conduct frantic search Senji