'திறந்து வைப்பதில் பெருமை இல்லை, உருவாக்குவதில்தான் உள்ளது'...! - கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்...!
There no pride opening there pride creating MK Stalin harshly criticized rulers opening ceremony Coimbatore Periyar Arivu Lagam
கோவையில் இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம், மேற்கு மண்டல மக்களின் அறிவுத் தேடலுக்குப் புதிய வாசலைத் திறக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நூலகங்கள், அறிவியல் மையங்கள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குவதில் தி.மு.க. அரசு முன்னோடியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து, தி.மு.க. அரசின் மற்றுமொரு மகத்தான திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, தமிழினத்தின் உயர்வுக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்த தந்தை பெரியாரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கோவை மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிப்பதோடு, குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தையும் அறிவியல் ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில், 2024–2025-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம்.அதன்படி, 2024 நவம்பர் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தரைத்தளத்துடன் ஏழு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடம், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட காலத்தில் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் இந்த அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.பெரியார் அறிவுலகம் வெறும் நூல்கள் நிறைந்த கட்டடமாக மட்டுமின்றி, அறிவியல், கல்வி, வாசிப்பு, ஆராய்ச்சி எனப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான மையமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், விண்வெளிப் பயணத் தூக்கி ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான நூலகமும், சொந்தமாகப் புத்தகங்களை எடுத்துவந்து படிப்பதற்கான பிரிவும் உள்ளன. மூன்றாவது தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.நான்காவது தளத்தில் தமிழ்ப் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
ஐந்தாவது, ஆறாவது தளங்களில் ஆங்கிலப் புத்தகப் பிரிவுகளும், புதிய தொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டும் மையமும் அமைக்கப்பட்டுள்ளன. ஏழாவது தளத்தில் அறிவியல் மையம் மற்றும் மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளன.காண்போரைக் கவரும் கட்டட அமைப்புடனும், சிந்தனையைத் தூண்டும் வசதிகளுடனும் உலகத் தரத்தில் இந்த அறிவுலகம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 1.25 லட்சம் நூல்களைக் கொண்ட இந்த மாபெரும் நூலகம், மேற்கு மண்டலத்தின் அறிவுக் கருவூலமாகத் திகழவிருக்கிறது.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரியார் அறிவுலகத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்திருந்தன.
அப்போதே திறப்பு விழா நடத்தலாம் எனப் பலரும் தெரிவித்தனர். ஆனால், பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.யார் திறந்து வைக்கிறார்கள் என்பதில் பெருமை இல்லை; மக்களுக்குத் தேவையான திட்டத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது. அத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துவம் பெற்றுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.அவரது ஆட்சிக்காலத்துக்குப் பிறகு, அந்த நூலகத்தை இடமாற்றம் செய்யவும் அதன் செயல்பாடுகளைச் சீர்குலைக்கவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தியதுடன், 2021-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நூலகத்துக்குப் புத்துயிர் அளித்தோம்.
இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு ஆதரவளிக்கும் அறிவகமாக அது விளங்குகிறது.அதனைத் தொடர்ந்து, நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தோம். சென்னையில் முதல்வர் படைப்பகங்களையும் நூலகங்களையும் உருவாக்கினோம்.தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தைப் புதுப்பித்து, சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல்களைப் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் உள்ளிட்ட புதிய வசதிகளை ஏற்படுத்தினோம்.
சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்திருந்த கோஷன் நூலகத்தையும் அதன் பழமை மாறாமல் சீரமைத்தோம். இந்த இரு நூலகங்களையும் அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.சென்னை, மதுரை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பிரம்மாண்ட நூலகங்களை அமைக்கத் திட்டமிட்டோம். அதன் தொடர்ச்சியாகவே கோவையில் பெரியார் அறிவுலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகமும், நெல்லையில் ரூ.100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரில் நூலகமும், சேலத்தில் ரூ.104 கோடியில் பாரதிதாசன் அறிவுலகமும், கடலூரில் ரூ.98.26 கோடி மதிப்பீட்டில் அஞ்சலை அம்மாள் அறிவுலகமும் அமைக்கத் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவை அனைத்தும் விரைவில் அடுத்தடுத்து திறக்கப்படவுள்ளன. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தி.மு.க. அரசு உருவாக்கிய திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து வெளிப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.
சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் எஞ்சியுள்ள வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனப் பல திட்டங்களைப் புதிய அரசு தொடர்ந்து திறந்து வைக்க வேண்டிய நிலை உள்ளது.அறிவு, பகுத்தறிவு, கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கி வருகிறது.
அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு ‘அறிவகம்’ எனப் பெயரிட்டார் பேரறிஞர் அண்ணா.அண்ணாவை ‘அறிஞர்’ என்றும், கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழறிஞர்’ என்றும் போற்றுகிறோம். கலைஞர் உருவாக்கிய கழகத் தலைமையகத்துக்கு ‘அறிவாலயம்’ எனப் பெயரிட்டதும் இந்த அறிவுப் பாரம்பரியத்தின் வெளிப்பாடுதான். அதன் தொடர்ச்சியாகவே கடந்த ஆண்டு கழக இளைஞரணி சார்பில் அறிவுத்திருவிழாவும் நடத்தப்பட்டது.அறிவின் ஒளி அனைவரையும் சென்றடைய வேண்டும்; அறிவு ஒரு சிலருக்கானதாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாக மாற வேண்டும்; வாசிப்புப் பழக்கத்தின் மூலம் தமிழ்ச் சமூகம் பண்பட்ட சமூகமாக உயர வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை அமைத்தோம். புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம்.
கீழடி, பொருநை உள்ளிட்ட இடங்களில் அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். இளைஞர்களின் சிந்தனையை வளப்படுத்தும் வகையில் மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளையும் நடத்தினோம்.தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இத்தகைய முயற்சிகள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன.
ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிடலாம் என நினைப்பதைப் போன்ற செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் காண முடிகிறது.பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்பப் பகுதியில் உள்ள பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டிருந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும், ‘முதல்வன்’ என்ற சொல்லைப் பார்த்தால் மக்களுக்கு மு.க.ஸ்டாலின்தான் நினைவுக்கு வருவார் என்று எதிர்தரப்பினர் அஞ்சுகிறார்கள் என்றால், அதுவே நமது வெற்றிக்குச் சான்றாகும். இது ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.
அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்பில்லாத, அறிவார்ந்த சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் உருவாக்கிய நூலகங்களும் வெளியிட்ட நூல்களும் நிச்சயம் முக்கியப் பங்கு வகிக்கும்.இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம், இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
எனது அன்புக்குரிய கோவை மக்களே, தி.மு.க. ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவுக்கு நீங்கள் திரளாகச் சென்று வருவதைப்போல, பெரியார் அறிவுலகத்தையும் குடும்பத்தினருடன் சென்று பாருங்கள். அடிக்கடி சென்று பயன்பெறுங்கள். கோவைக்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் இந்த அறிவுலகத்துக்கு அழைத்துச் சென்று, நமது ஊரின் பெருமையை எடுத்துக்காட்டுங்கள்.
பெரியார் அறிவுலகத்தின் கதவுகள் திறக்கட்டும்; அறிவொளி எங்கும் பரவட்டும்; அறியாமை அகலட்டும்! வாழ்க பெரியார்!