ஆன்லைன் டிரேடிங் மோசடி; அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ரூ. 59 லட்சத்தை இழந்த நபர்; மோசடிக்காரர்கள் இருவர் கைது..!
Man Loses Rs 59 Lakh in Online Trading Scam in Thiruverkadu
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வாட்ஸ்-அப் எண் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் பெறலாம் என்று மர்ம நபர்கள் ஆசைவார்த்தை கூறி அவரை அணுகியுள்ளனர்.
அந்நபர்களிடம் பேசியவரை அவர்கள் மூளைச் சலவை செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி, அவர்களது வங்கி கணக்குகளுக்கு ஆரம்பத்தில் குறைந்த தொகையாக, முதலீடாக அனுப்பி வைத்துள்ளார். அதற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி போலி ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட சில தொகை அவரின் ஐடியில் இருப்பது போலக் கட்ட செய்துள்ளனர்.
அதை நம்பிய கார்த்திகேயன், பண ஆசையில் மேலும் பல தவணைகளில் கிட்டத்தட்ட 59 லட்ச ரூபாய் வரை முதலீடாக அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர், பல மாதங்களாகியும் கார்த்திகேயன் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் வரவில்லை. மாறாக முதலீடு செய்த பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை. அது தொடர்பாக குறித்த இரண்டு பேரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் கார்த்திகேயனின் மொபைல் எண்ணை ப்ளாக் லிஸ்டில் போட்டுவிட்டு மாயமாகியுள்ளனர். அப்போதுதான் தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து அவர்ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக, இணையவழி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திருவள்ளூரைச் சேர்ந்த விஜய கார்த்திக் மற்றும் திருவண்ணாமலையில் ஒரு தனியார் வங்கி மேலாளராக இருக்கும், மோனிஷ்ராஜ் ஆகிய இருவர் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மோசடி நபர்களிடம் இருந்து அதிகளவு கமிஷன் தொகை பெறுவதற்காக, ஆன்லைன் டிரேடிங் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்குகளைப் பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து மோசடியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டுத் தலைமறைவாகக் குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Man Loses Rs 59 Lakh in Online Trading Scam in Thiruverkadu