பராமரிப்பு பணிகளால் ரெயில் சேவைக்கு அதிரடி மாற்றம்..! - பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தம்...!
Maintenance work causes drastic changes train services Many express trains stop halfway
தூத்துக்குடி ரெயில்வே பிரிவில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, அப்பகுதியைச் சார்ந்த பல ரெயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, சில ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலக்காடு சந்திப்பில் இருந்து தூத்துக்குடி நோக்கி புறப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் (16792) ரெயில் வருகிற டிசம்பர் 14 முதல் ஜனவரி 27 வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட்டு, திருநெல்வேலி–தூத்துக்குடி சேவை நிறுத்தப்பட உள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு சந்திப்பு செல்லும் (16791) ரெயில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து மட்டுமே தொடங்கும்.
தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16766) டிசம்பர் 20-ம் தேதி மட்டும் தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து புறப்படும். இதனால் தூத்துக்குடி–கோவில்பட்டி இடையிலான சேவை தற்காலிகமாக ரத்து. மறுமார்க்கத்தில் (16765) டிசம்பர் 21-ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவில்பட்டிவரை மட்டுமே ரெயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12693) டிசம்பர் 20, 21, 22 தேதிகளில் தூத்துக்குடிக்கு வராமல் வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். இதனால் வாஞ்சி மணியாச்சி–தூத்துக்குடி சேவை ரத்து. மறுமார்க்க ரெயில் (12694) டிசம்பர் 21, 22, 23 தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்படும்.
மைசூர்–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16236) டிசம்பர் 20, 21, 22 தேதிகளில் தூத்துக்குடி வராது; வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் (16235) டிசம்பர் 21, 22, 23-ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து மைசூருக்குப் புறப்படும்.
ஓகா–தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் (19568) டிசம்பர் 19-ம் தேதி கோவில்பட்டிவரை மட்டுமே ஓடும். அதேபோல் மறுமார்க்க ரெயில் (19567) தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து ஓகாவிற்கு இயக்கப்படும். இதனால் தூத்துக்குடி–கோவில்பட்டி ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
Maintenance work causes drastic changes train services Many express trains stop halfway