மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக அமைதியாக இருக்க அதிமுக அதிரடி! எடப்பாடி பழனிசாமியின் அடுத்த மூவ் என்ன? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்துள்ள நிலையில், அதன் முதல் அரசியல் அக்னி பரிட்சையாக இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சியான தவெகவும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் இன்னும் வேட்பாளர் தொடர்பான பணிகளை வெளிப்படையாக தொடங்காத சூழலில், அதிமுக திடீரென தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகள் காலியாகின.

ஒரு சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து தமிழகத்தில் காலியாக இருந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, செப்டம்பர் 9ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

செப்டம்பர் 17ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக விருப்ப மனு பெறும் பணிகளை தொடங்கியிருப்பது கட்சியினரிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்னும் வெளிப்படையாக தேர்தல் பணிகளை தொடங்காத நிலையில், அதிமுக முன்கூட்டியே வேட்பாளர் தேர்வு பணியை ஆரம்பித்திருப்பது கட்சியின் தேர்தல் தயார்நிலையை வெளிப்படுத்துவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

2026 தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் அதிமுகவின் நிலை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் கட்சியின் கள செயல்பாட்டை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் கருதுகின்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் அதிமுகவுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்த முடிவு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமானதாக அமையக்கூடும்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் விருப்ப மனு பெறும் பணிகளை தொடங்கியதன் மூலம் அதிமுக இன்னும் உயிர்ப்புடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி காட்டியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதே வேகத்தையும், தேர்தல் களத்தில் சரியான வியூகத்தையும் அதிமுக வெளிப்படுத்துமா என்பதுதான் அடுத்த கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maduranthakam and Dharapuram byelections DMK remains quiet while AIADMK makes bold moves What is Edappadi Palaniswami next move


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->