ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madras HC Grants Permission for RSS March Across Tamil Nadu on Oct 25 and Nov 1
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். (RSS) பேரணி நடத்த அனுமதி வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரணிக்குத் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்த தமிழகக் காவல்துறையைக் கண்டித்துள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டாம் எனக் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான நேரத்தையும் இடங்களையும் அக்டோபர் 19-க்குள் இறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் அரசு சம்மதம்
ஆர்.எஸ்.எஸ். நிறுவன நாளை முன்னிட்டுத் தமிழகத்தில் 128 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி மாநிலச் செயலாளர் ஜெகதீசன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழிபாட்டுத் தலங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இதற்குமுன் காவல்துறை அனுமதி மறுத்து வந்தது.
இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையின்போது, உள்ளூர் காவல்துறையினர் பரிந்துரைக்கும் மாற்றங்களுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட தேதிகளில் ஊர்வலங்களை நடத்த மாநில அரசு சம்மதம் தெரிவிப்பதாக அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். முந்தைய நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பும் உறுதி அளித்ததை அடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்
விசாரணையின்போது நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
ஒரே காரணங்கள் நிராகரிப்பு: பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன என்ற பழைய காரணங்களைக் கூறி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுப்பதை நீதிமன்றங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளன.
முஸ்லிம்களுக்குத் தேவையில்லாத கெட்ட பெயர்: இஸ்லாமியர்கள் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கப்படாத நிலையில், காவல்துறையே ஏன் அவர்களுக்குத் தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்குகிறது?
காஷ்மீருடன் ஒப்பீடு: பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு-காஷ்மீரிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் போது, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி மறுப்பது ஏற்புடையதல்ல. அரசே தனது குடிமக்களை எதிரிகளைப் போல நடத்தக் கூடாது என்று நீதிபதி கடுமையாகச் சாடினார்.
English Summary
Madras HC Grants Permission for RSS March Across Tamil Nadu on Oct 25 and Nov 1