லண்டனில் பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை - தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி! 
                                    
                                    
                                   London Thirumangai Azhvar Statue 
 
                                 
                               
                                
                                      
                                            பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது.
கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகியவை. மேற்கண்ட சிலைகள் வெளிநாட்டைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பலால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலைதிருட்டு தடுப்புபிரிவினரின் இடைவிடாத முயற்சியால் மேற்கண்ட சிலைகள் வெளிநாட்டில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால் 1967ல் வாங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ஏனைய காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வழக்கின் புலன்விசாரணையில் தற்போது மேற்கண்ட நான்கு சிலைகளின் பிரதிகள் மட்டுமே கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உண்மையான சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது. மேற்கண்ட தகவல்களை கண்டறிந்த தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினர், திருடி கடத்தி விற்கப்பட்ட சிலைகளை மீண்டும் தமிழகம் கொண்டுவந்து உரிய வழிபாட்டு கோவிலில் வைக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவின் காவல்துறை தலைவர் முனைவர். இரா.தினகரன் இகா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மருத்துவர் இரா.சிவகுமார் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையிலும் திருடுபோன சிலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானமுறை சாட்சியங்கள், ஆவணங்கள் தீவிரமாக சேகரிக்கப்பட்டது. இந்த ஆவணங்களை சேகரித்து அந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலைச் சேர்ந்தது என்பதை நிரூபிக்கும் முயற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவின் அதிகாரிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முழுமையான முக்கியமான ஆதாரங்களை முறையாக தொகுத்து அவற்றை தற்போது மேற்கூறிய 4 சிலைகளும் உள்ள சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கைகளாக அனுப்பிவைத்தனர். மேற்கண்ட சாட்சிய ஆவணங்கள், சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது என்பதை ஐயமற நிரூபணம் செய்யும் ஆவணங்கள்.
சிலைகடத்தல் திருட்டு தடுப்புபிரிவினரால் பல்கலைகழகத்திற்கு (அஸ்மோலின் அருங்காட்சியகம் லண்டன் ஆக்ஸ்போர்டு இங்குள்ளது) அனுப்பப்பட்ட அறிக்கையின் தொடர்சியாக மேற்படி பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர் தமிழகம் வந்து அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையினை சோதனை செய்தார். 
அப்போது திருமங்கை ஆழ்வார் சிலையானது தமிழகத்தைச் சேர்ந்ததுதான் என்பதனை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் புலன்விசாரணை அதிகாரி திரு. P. சந்திரசேகரன், காவல்துணைகண்காணிப்பாளர் அவர்கள் சமர்ப்பித்த சாட்சிகளையும் ஆவணங்களை கூர்ந்தாய்வு செய்ததில் திருப்தி அடைந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரதிநிதிகள், அவர்களுடைய பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர். 
தீவிர பரிசீலனைக்குப்பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயர்குழுவினர், திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையானது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோண ஸ்ரீ சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதன் தொடர்சியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடுசிலை திருட்டு தடுப்புபிரிவினருக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட கடிதத்தில் மேற்படி சிலையை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இந்தச் சிலையை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர். ஒரிருமாதங்களில் இந்தச் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளும் சிலைதிருட்டு தடுப்புப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் திரு. சங்கர்ஜுவால் இ.கா.ப., அவர்கள் இந்த சிலையை கண்டுபிடித்து, உரிய ஆதாரங்களை அளித்து மீண்டும் கும்பகோணம் கோவிலுக்கே வெற்றிகரமாக திருப்பிக்கொண்டுவர காரணமாக இருந்த தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினரை வெகுவாகபாராட்டினார்.
தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புபிரிவினர், இதேபோன்று மீதமுள்ள காளிங்கநர்த்தன கிரு ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டுவர தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       London Thirumangai Azhvar Statue