நொடிப்பொழுதில் பறிபோன உயிர்...! ஓடும் ரயிலில் ஏற முயன்ற வடமாநில இளைஞர் தவறி விழுந்து துடிதுடித்து உயிரிழப்பு...!
life lost instant North State youth who trying board moving train fell down and died
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய நாகோன், தனது நண்பர்களுடன் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் பயணிக்க இருந்த ரயில் நடைமேடையை விட்டு புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதைத் தவறவிடக் கூடாது என்ற அவசரத்தில் வேகமாக ஓடி ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நாகோனின் கால் நழுவி, ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இந்த கோர விபத்தை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சம்பவத்தை கண்ட பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று நாகோனை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற போராடினர்.
சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, "நான் உயிர் பிழைக்க மாட்டேன்... என் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விடுங்கள்" என்று உருக்கமாக கூறிய நாகோன், தனது செல்பேசியின் கடவுச்சொல்லையும் நண்பர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மருத்துவர்களின் தீவிர முயற்சிகளும் பலனளிக்காமல், சில நிமிடங்களிலேயே நாகோன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, புறப்பட்டுச் செல்லும் அல்லது இயக்கத்தில் இருக்கும் ரயில்களில் அவசரமாக ஏறவோ, இறங்கவோ முயற்சிப்பது உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
English Summary
life lost instant North State youth who trying board moving train fell down and died