பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்; பாலிடெக்னிக் மாதிரி வினாத்தாளில் குளறுபடிகள் உள்ளதாக விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டு..!
Lecturers allege irregularities in the polytechnic sample question paper
தமிழகத்தில் இயங்கும், அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், நடப்பு கல்வியாண்டு முதல், சரியான விடைகளை தேர்வு செய்யும் எம்.சி.க்யூ., வடிவில், செமஸ்டர் தேர்வுகள் நடத்திட, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. அதன்படியே, கல்வியாண்டு தொடக்கத்தில்இருந்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன.
பேராசிரியர்களிடம் கருத்து கேட்புகளுக்கு பின், அந்த முடிவில் இருந்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பின்வாங்கியது. இறுதியாக, எம்.சி.க்யூ., வடிவில் ஒரு மதிப்பெண், எழுத்து தேர்வு வடிவில், இரண்டு மற்றும், 10 மதிப்பெண் அடங்கிய வினாத்தாள் தயாரித்து, செமஸ்டர் தேர்வுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பொதுத் தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வை எளிமையாக எதிர்கொள்ள, மாதிரி வினாத்தாள் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது, அந்த முறை, நடைமுறையில் இல்லை.

இந்நிலையில், பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், செமஸ்டர் தேர்வை சிரமமின்றி எழுத, மாதிரி வினாத்தாள் தொகுப்புகள், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. குறித்த மாதிரி வினாத்தாள்களில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டிப்ளமோ படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இறுதி கட்டத்தில், அவசர அவசரமாக மாதிரி வினாத்தாள்கள் கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டன என்றும் விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றதாகவும், பாடத்திட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத கேள்விகள், மாதிரி வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், மின்னணுவியல் துறை சார்ந்த பாடத் தேர்வை, கணித வடிவில் விடை அளிக்கும் வகையில் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது, மாணவர்கள் தேர்வு மனநிலையை பாதிக்கும் என்றும், வினாக்களை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில், மாணவர்களை குழப்பும் வகையில், வினாக்கள் கேட்கப்படுவது, தேர்ச்சி சதவீதத்தை பெரிதாக பாதிக்கும் என்றும் விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
English Summary
Lecturers allege irregularities in the polytechnic sample question paper