பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி அணை மூடல்: கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
Kodiveri dam closed due to flooding in Bhavani River
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டுள்ளதோடு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் அருவிபோல் தண்ணீர் விழுவதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும்.
அத்துடன், அணையின் மேல் பகுதியில் பவானி ஆற்றின் கரையோரமாக சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பாதுகாப்பான பரிசல் பயணம், கடற்கரை போன்ற நீண்ட மணல்பரப்பு, குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. இந்த அணைக்கு செல்ல 05 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும், ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருகைத் தருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் இருந்து இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொடிவேரி அணையிலிருந்து 1,691 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த வெள்ள நீர் பாதுகாப்பு கம்பியைத் தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால், கொடிவேரி அணையை மூடியுள்ளதோடு, சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு வரவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்குள்ள நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Kodiveri dam closed due to flooding in Bhavani River