வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் கேரளா லாட்டரி விற்பனை...! கோவையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் அதிரடி கைது...!
Kerala lottery sale online through WhatsApp 6 people including 3 women arrested Coimbatore
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக 3 பெண்கள் உள்பட 6 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்தவர் கவுதம் (34). இவர் கேரள மாநிலம் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி வழியாக விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கவுதமின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.சோதனையின்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்து, கவுதமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கவுதம் தனது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) உள்ளிட்டோருடன் சேர்ந்து கேரள மாநில ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.இதற்காக லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, ஆன்லைன் வாயிலாக பணம் பெற்றுக்கொண்டு சீட்டுகளை விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2½ லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kerala lottery sale online through WhatsApp 6 people including 3 women arrested Coimbatore