சமோசா கடைக்குப் பின்னால் போதை வியாபாரம்...! நெல்லையில் வீட்டில் 4 கிலோ கஞ்சா பதுக்கிய வியாபாரி அதிரடி கைது...!
Drug dealing behind samosa shop Dealer arrested hoarding 4 kg ganja home Nellai
நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டுக்குள் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக சமோசா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ் (25). இவர் அப்பகுதியில் சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, தனிப்படை காவலர்கள் நேற்று முன்தினம் இரவு முகமது யூனுசின் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா சிக்கியது.

இதனைத் தொடர்ந்து முகமது யூனுசை காவலர்கள் கைது செய்ததுடன், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.பின்னர், கைது செய்யப்பட்ட முகமது யூனுசையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தனிப்படை காவலர்கள் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவலர்கள் நடத்திய விசாரணையில், முகமது யூனுசின் உறவினர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தகவல் தெரியவந்தது.
சம்பவத்தன்று அந்த உறவினர் 4 கிலோ கஞ்சாவை முகமது யூனுசிடம் கொடுத்து, வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், 2 நாட்களுக்குப் பிறகு வந்து வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக முகமது யூனுசை கைது செய்த காவலர்கள், கஞ்சாவை கொடுத்து சென்றதாக கூறப்படும் அவரது உறவினரையும் இந்த வழக்கில் சேர்த்து தேடி வருகின்றனர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Drug dealing behind samosa shop Dealer arrested hoarding 4 kg ganja home Nellai