சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் கைது..!
Joint Commissioner of the Pollution Control Board arrested at Chennai Airport for sexually assaulting a young woman
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர், சென்னை விமான நிலையத்தில் 24 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகளிர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன் (59). இவர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
குறித்த விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது செந்தில்வேலன் அதே விமானத்தில் பயணித்த 24 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
அப்போது அங்கிருந்து நகர்ந்த பெண்ணிடம், உடைமைகளை எடுக்கும் இடத்தில் வைத்தும், மீண்டும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், செல்போனை கையில் எடுத்து, 'ஒரு செல்பியோடு நமது வாழ்க்கையைத் தொடங்கலாமா?' என இளம்பெண்ணிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பொறுமையிழந்த பெண், இது குறித்து அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். உடனே, சென்னை விமான நிலைய மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில் வந்த போலீஸார், இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று புகாரைப் பெற்றுள்ளனர். இதையடுத்து செந்தில்வேலன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வக்கிர சம்பவத்தில் ஈடுப்பட்ட செந்தில்வேலன் கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை ஆணையராக பணிபுரிவதாக கூறப்படுகிறது. அத்துடன், நடத்தையின் காரணமாக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
English Summary
Joint Commissioner of the Pollution Control Board arrested at Chennai Airport for sexually assaulting a young woman